கரூர்: முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை (70). கோயில் பூசாரி. இவரது மகன் நல்லதம்பி (44). சமூக ஆர்வலர்களான இவர்கள் முதலைப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
பின்னர் இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி வீரமலை, நல்லதம்பி ஆகியோரை ஒரு கும்பல் வெட்டிக் படுகொலை செய்தது.
இந்த வழக்கு சம்பந்தமாக குளித்தலை காவல் துறையினர் சௌந்தரராஜன், ஜெயகாந்தன், சசிகுமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். மேலும் சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இவ்வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (ஏப்.25) விசாரணைக்கு வந்தது. இதனால் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தீர்ப்பு விவரங்களை அறிந்து கொள்வதற்காக கரூர் நகர காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.
இதையடுத்து கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி எம்.கிறிஸ்டோபர் இந்த வழக்கில் சவுந்தரராஜன், ஜெயகாந்தன், சசிதரன், ஸ்டாலின், பிரபாகரன், பிரவீண்குமார் ஆகிய 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், முதல் குற்றவாளியான சவுந்தரராஜன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழுப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
மேலும் கவியரசு, சண்முகம், ஹரிஹரன், நடராஜன் ஆகிய 4 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: கோவையில் மருத்துவ மாணவி தற்கொலை