கரூர்: ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். கரூர் நகர் பகுதியில் திருப்பூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக வெளிநாடு ஜவுளி ஏற்றுமதி, வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியில் சுமார் 8000 கோடி அளவுக்கு ஆண்டொன்றுக்கு ஏற்றுமதி நடைபெற்று வருகிறது
இந்நிலையில் ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு தடையாக நூல் விலை ஏற்றம் கடந்த சில மாதங்களாக செயற்கையாக தோற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பருத்தி விலையை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக மத்திய அரசு பருத்தி இறக்குமதி மீதான வரியை நீக்கி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை நீக்கிய ஒரே வாரத்தில் கரூர் நகரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான நூல்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது
பருத்தி மற்றும் நூல் விலையை குறைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பருத்தி நூலை அதிக அளவில் பயன்படுத்தி வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்யும் கரூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் வர்த்தக ஒப்பந்தங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுடன் இந்த நிறுவனங்களை நம்பியுள்ள ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கிராமப்புற பெண்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்
எனவே பஞ்சு ஏற்றுமதி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு நிரந்தர தடை விதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். உடனடியாக செயற்கை விலை ஏற்றத்தைத் தடுத்து, நூல் விலையை குறைக்க ஆவண செய்ய வேண்டும். பருத்தி ஏற்றுமதிக்கு நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஏற்றுமதி ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கையை முன்வைக்கிறோம்.
இன்னும் இரண்டு வார காலத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதனால் மே மற்றும் ஜூன் மாத ஏற்றுமதி சுமார் 1,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.
இதயும் படிங்க:ஊரங்கால் ரூ. 3 கோடி மதிப்பு சேலைகள் தேக்கம் - ஜிஎஸ்டி-க்கு விலக்கு அளிக்க கோரிக்கை