கரூர்: பட்டியலின மக்களின் மயானத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து தர மறுத்து வரும் ஆதிதிராவிடர் நலத்துறையை கண்டித்து, கரூரில் தலித் விடுதலை இயக்கம் மற்றும் சமநீதி கழகம் சார்பில் இன்று நடைபெற இருந்த கண்டன பேரணிக்கு, கரூர் மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
மேலும், பசுபதிபாளையம் காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் கண்டனப் பேரணி குறித்து, கரூர் மாநகரின் முக்கிய நகர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்படும் பொழுது, போஸ்டர்களை பறித்து ஒட்டக்கூடாது என கூறியுள்ளதாகத் தெரிகிறது. காவல் துறையின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து, கரூர் மாவட்ட ஆட்சியரிடம் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமையில் புகார் மனு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட கள ஆய்வில் 32 கிராமங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு மயான வசதி, மாயானத்திற்கான வழித்தடம் என அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இவற்றை வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் குறிப்பாக, சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கரூரில் பட்டியலின மக்களுக்கான மயானங்களுக்கான வழித்தடம் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் சார்பில் இன்று கண்டன பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தது.
அதற்கான அனுமதியை காவல் துறை ஆய்வாளர் ஓம் பிரகாஷ் மறுத்து, கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஒட்டப்பட இருந்த சுவரொட்டிகளை பறித்துச் சென்று இருக்கிறார். காவல் துறை அதிகாரியின் இந்த நடவடிக்கை கண்டனத்திற்கு உரியதாகவும், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானதாகவும் உள்ளது" என்று கூறினார்.
மேலும், காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பட்டியலின மக்கள் வாழும் கிராமங்களில் மயான வசதி, சாலை வசதி இல்லாத கிரமங்களில் சாலை வசதிகள் அமைத்து தர வேண்டும் என்றும், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா, "இந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதில் மெத்தனம் காட்டப்பட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மாநிலம் தழுவிய போராட்டத்தை ஜனநாயக சக்திகளுடன் ஒன்றிணைத்து நடத்துவோம்" என்றும் கூறினார்.
இந்நிகழ்வின்போது சமநீதிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான புகழேந்தி, லோக் ஜனசக்தி கட்சியின் கரூர் மாவட்டத் தலைவர் முன்னூர் ஆறுமுகம், திராவிடர் தமிழர் கட்சி கரூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ் உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - சென்னை விமான நிலையத்தில் அலர்ட்!