கரூர் மாவட்டம்: மாயனூர் காவல் நிலையம், சின்னதாராபுரம் காவல் நிலையம் , க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலையம் முதலிய காவல் நிலையங்களில் பட்டியல் இன மக்கள் அளிக்கும் புகார்களை உடனுக்குடன் விசாரித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யாமல் காவல் துறை மெத்தனம் காட்டி வருவதாக தலித் விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் கட்சி மற்றும் சம நீதிக் கழகம் ஆகிய முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நேற்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
இதன் பின்னர் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், ’க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் (09.03.2023 அன்று) அரவக்குறிச்சி அருகே உள்ள தொக்குப்பட்டி கருங்கல் புளியம் பட்டியைச் சேர்ந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஏமாற்றிவிட்டதாக மீது புகார் மனு கொடுத்து உள்ளார். ஆனால், இன்று வரை ஏறக்குறைய 70 நாட்களைக் கடந்தும் காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இதேபோல கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கட்டளை கிராமத்தில் வசிக்கும் முனியப்பன் பட்டியல் இனத்தைச் சார்ந்த நபர். அதே பகுதியில் வசிப்பவர் தான், ஜெகதீசன்.
கடந்த 04.05.2023 அன்று தோட்டத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த முனியப்பனை, ஜெகதீசன் மற்றும் அவரின் மனைவி மேனகா ஆகிய இருவரும் கட்டையால் காலில் தாக்கி உள்ளனர். இதில் முனியப்பனின் இடது காலில் முறிவு ஏற்பட்டு 04.05.2023அன்று கரூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து மாயனூர் காவல் நிலையத்தில் எந்த விதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதே போல, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் அருகே உள்ள ஆயக்கவுண்டன்பாளையத்தில் வசிக்கும் வேல் முருகன் என்பவரை பைனான்ஸ் கம்பெனி முகவர்கள் தாக்கியதால் படுகாயம் அடைந்து, கடந்த மே 14ஆம் தேதி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு நேற்று (17.05.2023) வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சின்னதாராபுரம் காவல்நிலையத்தில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்டத்தில் இது போன்ற பட்டியல் இன மக்கள் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுவதும், அதேபோல் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
எனவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் புதிய திருத்தம் 2015”-ன் பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், “கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பிரதாயமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பட்டியல் இன மக்கள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் மற்றும் காவல் நிலையத்தில் பதியப்பட்ட புகார்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை. இதைத் தவிர வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கிராமப்புறங்களில் வன்கொடுமைகளை தடுப்பதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு சட்ட விதிமுறைகள் இருந்தும் இதுவரை கரூர் மாவட்டத்தில் குழுக்கள் அமைத்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இது குறித்து தலித்து விடுதலை இயக்கத்தின் முன்னெடுப்பில் பல்வேறு முற்போக்கு இயக்கங்களை ஒருங்கிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆதி தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்க பிரிவு தலைவர் துரை அமுதன், சமநீதிக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: வடசென்னையில் தொடர் பைக் திருட்டு - பொல்லாதவன் பிரதர்ஸ் சிக்கியது எப்படி?