கரூர்:தலித் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் தனியார் அரங்கில் மாநிலத் தலைவர் ச.கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலித் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளராக விடுதலைவீரன், மாநில மாணவரணி செயலாளராக பீமாராவ், இளைஞர் அணி செயலாளர் கிச்சா, மகளிர் அணி செயலாளராக நதியா ஆகியோர் ஒரு மனதாக செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டனர்.
மேலும், கரூரில் நன்னியூர் ஊராட்சி மன்ற பெண் பட்டியின தலைவர் சுதா, சாதிய வன்கொடுமை நடப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; மேலும் ஊராட்சி மன்றத்தலைவரை பணி செய்யவிடாமல் தடுக்கும் நபர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், கரூரில் சமூக ஆர்வலர் ஜெகநாதன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் திமுக துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது வர்ணாசிரம தாக்குதல் நடத்தி வரும் இந்து அமைப்புகளைக் கண்டித்தும் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் பட்டியல் இன மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், எதிர்வரும் அக்டோபர் 5 வீரத்தாய் குயிலி நினைவு நாளை சிவகங்கையில் வீரவணக்கம் செலுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச. கருப்பையா பேசுகையில், 'கரூர் மாவட்டத்தில் நன்னியூர் ஊராட்சி மன்ற பட்டியலினத் தலைவருக்கு சாதியப்பாகுபாடு காட்டி, பணி செய்ய விடாமல் தடுத்த நன்னியூர் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினர் நல்லசாமி, முன்னாள் நன்னியூர் ஊராட்சி மன்றத்தலைவர் குமாரசாமி, ஊராட்சி செயலாளர் நளினி அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் மீது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் சுதா வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய காவல்துறை மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. சமூக நீதி காக்கும் அரசு என்று கூறும் திமுக அரசு ஊராட்சி மன்றத்தலைவருக்கு ஏற்பட்டுள்ள நிலையை கருதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
நன்னியூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் எதிர்வரும் திங்கட்கிழமை தலித் விடுதலை இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து கோரிக்கை மனு அளிக்க உள்ளது' எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க:பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - பாஜக எம்எல்ஏ எம்.ஆர். காந்தி