தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டுகிறது.
இந்நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 10 நோயாளிகள் உயிரிழந்தனர். இதனால், மாவட்டத்தில் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 163ஆக உயர்ந்துள்ளது.
இன்று (மே.25) மாலை நிலவரப்படி, சிகிச்சை முடிந்து 151 பேர் வீடு திரும்பியுள்ள சூழ்நிலையில், புதிதாக 313 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2,561ஆக உயர்ந்துள்ளது.
மே 1ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை கரூர் மாவட்டத்தில் புதிதாக 7,154 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், 133 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு நாளொன்றுக்கு 30 பேர் இறப்பதாகவும், ஆனால் குறைந்த எண்ணிக்கையே காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.