கரூர் மாவட்டம், போத்துராவுதன்பட்டியை அடுத்துள்ள குள்ளமாபட்டியைச் சேர்ந்த பழனிசாமி (வயது 50), எலக்ட்ரிசியனாகப் பணிபுரிந்து வந்தார். திருச்சி மாவட்டம், எட்டரை பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது 35), கழுகூர் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கழுகூரில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, குளித்தலையில் இருந்து மணப்பாறை நோக்கி வேகமாக வந்த காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில், கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பழனிசாமி, ராஜா இருவரின் மீதும் மோதியது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து கார் ஓட்டுநரும், காரில் பயணித்த நபர்களும் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்நிலையில், தகவலறிந்து வந்த தோகைமலை காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு!