கரூர் மாவட்டத்தில் பாஜக மகளிரணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட மகளிரணி தலைவி மீனா தலைமை தாங்கினார். இவர் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் என்பதால் குளித்தலை பகுதியிலிருந்த மகளிரை கரூருக்கு போராட்டத்தில் பங்கேற்பதற்காக வாகனத்தின் மூலம் அழைத்து வந்தார்.
கரூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து பெண்கள் வாகனத்தின் மூலம் சொந்த ஊரான குளித்தலைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மணவாசி பகுதியில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி அலுவலர்கள் வாகனத்தை மறித்து வரி கேட்டனர்.
அப்போது, வாகனத்தில் இருந்த பெண்கள் கீழே இறங்கி மத்தியில் ஆளும் பாஜக அரசு மகளிர் அணியிடம் சுங்கம் வசூலிப்பதா ? ஆளுங்கட்சி அரசு இடையே சுங்கம் வசூலிக்கக் கூடாது என தெரிவித்து மணவாசி சுங்கச்சாவடியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர், இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.
மேலும், சுங்கச்சாவடி அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடக்கோரி, வரி வசூலிக்காமல் அனுப்பி வைத்தனர்.