கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி எண்: 213 Mஇல் திமுகவினர் அதிகளவில் வாக்குச் சாவடிக்குள் இருப்பதாகவும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆதரவாளர்கள் சிலர், திமுகவிற்கு வாக்குச் சேகரிப்பதாகவும் கூறி பாஜகவினர் வாக்குச்சாவடி மையத்தினை முற்றுகையிட்டு அலுவலர்களிடம் முறையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், பள்ளப்பட்டி வாக்குச்சாவடி மையத்தில் பாஜகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது.
பின்னர் வேட்பாளர்களுக்கான அனுமதிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் தவிர்த்து மற்ற பலரும் வாக்குச்சாவடி மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர், அரவக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.