அதிமுக கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, புஞ்சை தோட்டக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் மலைவீதி, நொய்யல் குறுக்குசாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அவருக்கு ஆதரவாக, திரைப்பட நடன இயக்குனர் கலா வாக்கு சேகரித்தார். அப்பொழுது, அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியின் செயல் அறிக்கை 2021 வெளியிடப்பட்டது.
பின்னர் பேசிய பாஜக வேட்பாளர் அண்ணாமலை, "அரவக்குறிச்சி தொகுதியில் 20,000 படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன். மத்திய அரசின் உதவியுடன் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைத்து கொடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவேன்.
அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள அனைத்து குளத்திலும் காவிரி அமராவதி ஆற்றில் தண்ணீரை நிரப்ப முயற்சி செய்வேன். பெண்கள் எந்த நேரமும் பாதுகாப்பாக வெளியே செல்லும் வகையில் புறக்காவல் நிலையம் அமைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன்.
அரவக்குறிச்சியில் உள்ள முருங்கை விவசாயிகளுக்கு வாரியம் அமைத்து உலகம் முழுவதும் வியாபாரம் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவேன். புகலூர் பகுதியில், வெற்றிலை அதிகம் விளைவிக்கப்படுவதால் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து தரப்படும். புகழிமலை முருகன் கோயிலுக்கு ரோப் கார் வசதி அமைத்து தருவேன்.
அதிமுக கூட்டணி கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் பொதுமக்களுக்கு பெற்றுத் தருவேன்" என்றார்.