கரூர்: கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, குளித்தலை, புகழூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கரில் வெற்றிலைப் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்படும், கற்பூரவல்லி, வெள்ளைக்கொடி உள்ளிட்ட வெற்றிலை ரகங்கள் முக்கிய நகரங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல்செய்யப்படுகிறது.
ஊரடங்கு காரணமமாக திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் வெற்றிலை கொள்முதல்செய்வதற்கு இடைத்தரகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், வெற்றிலை கொடிக்கால் வயலில் வெற்றிலையை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்ப முடியாத இக்கட்டான சூழ்நிலை உழவர்களுக்கு உள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் வேளாண்மையை மேம்படுத்த வழங்கும் மானியம், கடனுதவி போன்றவை இந்த உழவர்களுக்குக் கிடைப்பதில்லை.
இது குறித்து நம்மிடையே பேசிய வெற்றிலை உழவர் கலைமோகன், "வெற்றிலை வேளாண்மையை நான் மூன்றாவது தலைமுறையாக மேற்கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள், திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளுக்குத் தடை போன்றவற்றால் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை பறிக்கப்படாமல் வயலிலேயே காயும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெற்றிலையை ஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு சுமார் 10 லட்சம் ரூபாய்வரை செலவு செய்ய வேண்டியது உள்ளது. மற்ற வேளாண் பகுதிகளைப் போல குறைந்த அளவு முதலீட்டை வெற்றிலை வேளாண்மையில் மேற்கொள்ள முடியாது.
கிணற்றுப் பாசனம் மூலம் டீசல், பெட்ரோல் மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சிவருகிறோம். வெற்றிலை பறிக்க ஆள்கள் கூலி, பராமரிப்புச் செலவு ஆகியவை கூடுதலாக இருந்தாலும் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும்போது அதிக அளவில் அறுவடைசெய்து குறைந்தபட்ச லாபம் ஈட்டிவந்தோம்.
தற்பொழுது, 2ஆண்டுகளாகவே மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் . ஊரங்கு காலத்தில் வேளாண் பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் எங்களிடம் கொள்முதல்செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 6,000 வரை விற்பனையான வெற்றிலை தற்பொழுது வெறும் ரூ. 700, 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் எங்களுக்கு முதலீடுகூட திரும்பக் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் இழப்பைச் சந்தித்துவருகிறோம்.
கரூர் மாவட்டம் மட்டுமல்லாது திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெற்றிலை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தேர்தலுக்கு முன்னர் எங்கள் பகுதிக்கு வருகைதந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வெற்றிலை உழவர்கள், இடைத்தரகர்கள் மூலம் வெற்றிலை கொள்முதல் நடைபெறுவதால் அதனை அரசே ஏற்று நடத்திடவும், கிருஷ்ணராயபுரம் பகுதியில் வெற்றிலை கிடங்கு அமைத்து அதனை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைவைத்தோம்.
மேலும், வெற்றிலை வேளாண்மையை மேம்படுத்த வெற்றிலை ஆராய்ச்சி மையம் இங்கு தொடங்க வேண்டும் எனவும் கூறினோம். தற்போது ஆட்சி அமைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் இதனைப் பரிசீலித்து வெற்றிலை வேளாண்மையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: கும்பகோணம் கொழுந்து வெற்றிலை விவசாயிகளின் பரிதாபம்!