கரூர்: கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் கடந்த மே 25ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தாக்கியதாக, கைதான 15 திமுகவினர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் படி, 15 திமுகவினர் ஜூலை 31ஆம் தேதி கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
பின்னர், 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கரூர் கிளை சிறையில் திமுகவினர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையில், 15 திமுகவினருக்கு நேற்று மாலை (ஆகஸ்ட் 1) ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து, கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி ராஜலிங்கம் உத்தரவு பிறப்பித்தார்.
ஜாமீன் மனுவிற்கு எதிராக வருமானவரித்துறை அதிகாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திமுகவினர் வெளியே வந்து ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்புள்ளதாக தெரிவித்ததால் அதனை ஏற்று நீதிபதி ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்தார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும், ஜாமீனில் விடுதலையான நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு முடிவில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜாமீன் கோரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திமுகவினர் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வரும் பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டபோது, சாதாரண அடிதடி வழக்குகளில் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நீதிமன்றம், ஜாமீன் தர மறுக்கிறது. ஆனால், வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொழுது, ஒரே நாளில் கைதான திமுகவினருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
மேலும், திமுகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு பிரிவுகள் என்பது வருமானவரித் துறை அதிகாரிகள் வந்த வாகனத்தை சேதப்படுத்தியதால் பொது சொத்தை சேதப்படுத்துதல், பெண் அதிகாரியை தாக்கி காயம் ஏற்படுத்துதல், கும்பலாகக் கூடி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ளதால் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு சாதகமாகவே வழக்கின் தன்மை உள்ளது என தெரிவிக்கின்றனர்.
மேலும், ஊடகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கான காட்சிகள் வலுவான ஆதாரங்களாக இருப்பதும், வருமானவரித்துறை அதிகாரிகள் புகாரில் பதியப்பட்ட வழக்கு என்பதாலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது மாறியுள்ளது.
இதையும் படிங்க:"பிராயசித்தம் தேடுவதற்கே அண்ணாமலை நடைபயணம்" - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!