கரூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்.15) பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள், வாகன பழுது நீக்கும் கடைகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் வாழை மரங்கள், தோரணங்கள், அலங்கார விளக்குகள் அமைத்து சிறப்பு பூஜைகளுடன் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது.
மைல் கல்லுக்கு மாலை
இந்நிலையில் கரூரின் உப்பிடமங்கலம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் வித்தியாசமான முறையில் ஆயுதபூஜையை கொண்டாடினர். அதன்படி சாலையின் ஓரம் உள்ள மைல் கல்லுக்கு வண்ணம் பூசி மாலைகள் அணிவித்து பல்வேறு பொருள்களை படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
இது குறித்து வழிபாடு நடத்திய சாலைப்பணியாளர்கள் பேசுகையில், “கிராமப்புற மக்கள் எல்லையில் உள்ள கடவுளை வழிபடுவது போல, மைல் கல்லே சாலைப் பணியாளர்களுக்கு கடவுளாக இருப்பதாக கருதி வழிபாடு நடத்தினோம்” என்றார்.
சாலைப்பணியாளர்கள் நடத்திய இந்த நூதன ஆயுத பூஜை கொண்டாட்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: தப்பியோடிய டி23 புலி எருமையைத் தாக்கியதால் பரபரப்பு