கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள கருப்பத்தூரைச் சேர்ந்த நாராயணனின் மகன் பிரபல ரவுடி கோபால் (52). இன்று(அக்.6) அதிகாலை தன் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் வெளிக்குச்சென்றுள்ளபொழுது, அங்கு அடையாளம் தெரியாத நபர்களால் தலைப்பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு தயாரித்தல், மற்றும் கொலைக்குற்றம் என தென்மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மேல் நிலுவையில் உள்ளன.
கொலைசெய்யப்பட்ட கோபாலின் குடும்பப்பின்னணி?
கொலை செய்யப்பட்ட கோபாலுக்கு பொன்மணி என்ற மனைவியும்; தமிழ்பொன்னி, கயல்பொன்னி என்கிற மகள்களும் மற்றும் நரேன்கார்த்திக், நரேன்ராஜ் என 2 மகன்களும் உள்ளார்கள்.
இக்கொலை குறித்து லாலாபேட்டை காவல்துறை ஆய்வாளர் சுகந்தி வழக்குப்பதிவு செய்து, உடலை கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு எஸ்.பி. சுந்தரவடிவேல் நேரில் சென்று ஆய்வு செய்தார். பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான கோபால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் குவியும் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்கள்
இதனிடையே கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பசுபதிபாண்டியனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் பிரேதப்பரிசோதனை நடைபெறும் இடத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனையடுத்து கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடைபெறும் பழிக்குப்பழி கொலைகள்
கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பழிக்குபழி கொலை சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் மூன்று பேர் சரணடைந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இன்று(அக்.6) கரூர் குளித்தலை அருகே பசுபதிபாண்டியனின் தீவிர ஆதரவாளரான கோபால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தையும் பெரும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.