கரூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஐந்து, ஆறு ஆகிய அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் இன்று (ஜூலை 29) தொடங்கியது. இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய அணு உலை வேண்டாம்!
அதில், "2014 செப்டம்பரில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியை அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு பொறுப்பாளர்களான சுப. உதயகுமார், முகிலன், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன், நித்தியானந்த் ஜெயராம் ஆகியோர் சந்தித்தோம்.
கூடங்குளம் 1, 2 அணு உலைகளைப் பற்றியும், அணு உலைகளின் பாதிப்புகளைப் பற்றியும், அறிக்கை கொடுத்து அவரிடம் விளக்கினோம். கூடங்குளத்தில் புதிதாக அணு உலை அமைக்கக் கூடாது என்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனக் கோரிக்கைவைத்தோம்.
வாக்களித்த கருணாநிதி
திமுக எம்பிக்கள் மூலம் அந்தக் கோரிக்கையை பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவதாக அவர் எங்களுக்கு உறுதியளித்தார். அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த அணு உலை போராட்ட ஈகியர் நினைவு நாளுக்கு, திமுக கட்சியின் சார்பாக அதனுடைய செய்தித் தொடர்பாளர் கே.எஸ். இராதாகிருஷ்ணனை அனுப்பிவைத்து அணு உலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசவைத்தார்.
கடந்த 2011இல் தொடங்கி நடந்துவந்த அணு உலைப் போராட்டத்தில் திமுக கட்சியின் தலைமையின் சார்பாக நேரடியாக அதன் பிரதிநிதி பங்கேற்ற நிகழ்வு இதுதான். பல்வேறு அரசியல் காரணங்களால் 2018இல் அவர் இறக்கும்வரை, நாங்கள் கேட்ட கோரிக்கையை கருணாநிதியால் நடைமுறைக்கு கொண்டுவர முடியவில்லை.
அமெரிக்காவின் அணு உலை பூங்கா
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமெரிக்காவின் அணு உலை பூங்கா அமைக்க முடியாது என அம்மாநில அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசும் அதை ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால் அணு உலைகளை எதிர்த்துத் தொடர்ந்து போராடி எண்ணற்ற அடக்குமுறைகளை இன்றுவரை சந்தித்துவரும், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக அணு உலைகளை கட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
அழிவுக்குள் செல்லும் தமிழ்நாடு
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியான கூடங்குளத்தில் மீண்டும் மீண்டும் அணு உலைகளைக் கட்டுவது என்பது, தென் தமிழ்நாடு, தென் கேரளா முழுமையான அழிவுக்கு வழிவகுக்கும்.
உலகம் முழுக்க நிராகரித்துள்ள அணு உலைகளை தமிழ்நாட்டில் தொடர்ந்து கட்டுவது என்பது, நெருப்பை அள்ளி தன் தலையில் கொட்டி தானே கொள்ளி வைத்துக் கொள்வது போன்ற அழிவுக்கானதாகும்.
அரசுக்கு கோரிக்கை
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் கூடாது என தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள நிலையில் கூடங்குளத்தில் புதிதாக 5, 6 அணு உலைகளை அமைக்கக் கூடாது என மாநில அரசு கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அதை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி தடுத்து நிறுத்த வேண்டும்.
மக்களின் பேராதரவுடன் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மு.க. ஸ்டாலின், தேர்தல் நிலைப்பாடாக அறிவித்தபடி அணுஉலை விரிவாக்கத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி, ஆழ்நில அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கவிடாமல் தடுத்து, தமிழ்நாடு அழியாமல் பாதுகாக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலையம்: 5, 6ஆவது அணுஉலை அமைப்பதற்கான கட்டுமானப்பணி தொடக்கம்