கரூர்: மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92ஆவது பிறந்தநாளையொட்டி, சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி புன்னம் சத்திரம் தனியார் பள்ளியில் இன்று (அக்.15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவனர் ஆசான் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.
இந்த சிலம்பம் சுற்றும் சாதனையில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் மற்றும் 5 வயது முதல் 45 வயது வரை உள்ள வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
குறிப்பாக ஆணியின் மீது நின்று சிலம்பம் சுற்றுவது, ஐஸ் கட்டி மீது, சைக்கிளை ஓட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது, கண்ணை கட்டிக்கொண்டு, பானையின் மீது நின்று கொண்டு, முட்டை பெட்டியின் மேல் நின்று, ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுவது மற்றும் சிலம்பத்தில் உள்ள பாதுகாப்பு கருவிகளைக் கொண்டு சிலம்பம் சுற்றுவது என சுமார் 2 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட சிலம்பம் சங்கத்தின் தலைவர் கே.ஆர்.சுரேஷ், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் கார்த்திக், எக்ஸ்போ பிரைட் கிளை மேலாளர் சிவக்குமார், கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வீர திருப்பதி, பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆசான் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.
மேலும், இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள், தொடர் 2:00 மணி நேரம் சிலம்பம் சுற்றுதல் என்பதால், குழந்தைகளை கைத்தட்டி உற்சாகமூட்டும் வகையில் ஊக்கப்படுத்தினர். நிகழ்ச்சி குறித்து பாரதம் சிலம்பம் பள்ளியின் ஆசான் கிருஷ்ணராஜ் கூறுகையில், சிலம்ப கலையை தமிழகம் முழுவதும் ஊக்குப்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் முதல் வயது வரம்பின்றி சிலம்பம் கற்றுக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உலக சாதனை நிகழ்ச்சி கரூரில் ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடிகர் விஜயை பார்த்து திமுகவிற்கு பயம்: கடம்பூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு