கரூர்: வரவனை அருகே உள்ள செருப்பிலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் சற்று மனநலன் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. சந்தோஷ் குமாரை கடந்த சனிக்கிழமை சிலர் வாயில் துணியை கட்டி, ஊது குழாய் மூலம் காலை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட பொதுமக்கள், இளைஞரை மீட்டு கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணையில் மனநலன் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக சாட்சி கூறிய மற்றொரு இளைஞர் பாலாஜியின் கைகளையும் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அகஸ்டின், ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், "கொடூரமான முறையில் மனநலன் பாதிக்கப்பட்ட இளைஞரை சிலர் தாக்கியதுடன் அவருக்கு ஆதரவாக காவல்துறை விசாரணையில் சாட்சி அளித்த மற்றொரு இளைஞரின் கையையும் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மக்களுடன், போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை காத்திருப்போம்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து சிந்தாமணிபட்டியில் பாதிக்கப்பட்ட பாலாஜி கூறுகையில், "இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை இதுவரை பதிவு செய்யப்படவில்லை. மேலும், போலீஸ் விசாரணையில் உண்மையை தெரிவித்து வாக்குமூலம் அளித்ததால் எனது கையையும் உடைத்து விட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று மிரட்டி வருகின்றனர். இரவு நேரத்தில் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள் என்று பாரபட்சம் இன்றி தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்து வருகின்றனர். இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இரு வேறு சமூகங்களுக்கு இடையே சாதிய மோதலாக உருவெடுக்கும் சூழ்நிலை உள்ளதால் காவல்துறை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:பிறந்த ஒரே நாளில் 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை!