கரூர் மாவட்டம் புலியூர் வெள்ளாளப்பட்டி முடக்குசாலை அருகே 2018 பிப்ரவரி 9ஆம் தேதி, காட்டுப்பகுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர், கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கைக் கரூர் பசுபதிபாளையம் காவல் துறையினர் விசாரித்துவந்தனர்.
தன்யாஸ்ரீ
இவ்வழக்கில் இறந்த நபரின் இடதுகையில் பச்சைகுத்தப்பட்டிருந்த கே.எஸ். தன்யாஸ்ரீ என்ற பெயரை மட்டுமே வைத்து, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தேடிவந்தனர். முக்கியப் பகுதிகளில் உள்ள சுவர்களில் விளம்பரப்படுத்தினர்.
விசாரணையில் தனிப்படை
அப்போது, திருப்பூர் பழச்சாறு கடை நடத்திவந்த கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ், மூன்றாண்டுகளாகக் காணவில்லை என கரூர் பசுபதிபாளையம் காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், அப்பகுதிக்கு விரைந்தசென்ற தனிப்படை, விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
இறந்துபோன நபர் சுப்பராஜ் என்பது உறுதியானது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த கரூரைச் சேர்ந்த கனகராஜ் என்பவரும் காணவில்லை என்பது தெரியவந்தது.
அன்னலட்சுமி
சந்தேகமடைந்த தனிப்படை, இறந்துபோன சுப்புராஜின் மனைவி அன்னலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். மேலும், சணபிரட்டி பகுதியில் கொலைசெய்யப்பட்ட சுப்புராஜின் மனைவி அன்னலட்சுமி அவரது தாய் ஜெயலலிதா, அவரது இரண்டு குழந்தைகளுடன் குடி இருந்ததாகக் தகவல் கிடைத்துள்ளது.
மேலும், செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் சுப்புராஜின் எண்ணுக்கு கனகராஜ் அடிக்கடி பேசி இருப்பதும் தெரியவந்தது. ஆனால், கனகராஜ் செல்போன் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை எவ்வாறு எடுத்துச்செல்வது எனத் தெரியாமல் காவல் துறையினர் குழம்பியிருந்தனர்.
வாக்குச்சாவடியில் சிக்கிய கனகராஜ்
இந்நிலையில், தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, சணபிரட்டி வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த கனகராஜை காவல் துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், சுப்புராஜ் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தது தெரியவந்தது.
நண்பர்களுடன் கொலை
மேலும், கனகராஜை கரூர் வரவழைத்து, தனது நண்பர்கள் பிரகாஷ், சந்தோஷ் ஆகியோருடன் இணைந்து, காட்டுப் பகுதியான புலியூர் முடக்கு சாலையில் வைத்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு சென்னை சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இவ்விவகாரத்தில் தொடர்புடைய கனகராஜ் மனைவி அன்னலட்சுமி, மாமியார் ஜெயலலிதா, நண்பர்கள் பிரகாஷ், சந்தோஷ் உள்ளிட்ட ஐந்து பேரையும், கரூர் பசுபதி பாளையம் காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். ஐந்து பேரையும் மத்தியச் சிறையில் அடைத்திட நீதிபதி உத்தரவிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்த தனிப்படை காவல் துறைக்கு, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை: பழிக்குப் பழி?