கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க இன்னொரு புறம் பெண்களை அடிப்பதும், தூண்களில் கட்டி வைத்து அடிப்பதும் போன்ற சம்பவங்களும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் சந்திப்பில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக அவ்வப்போது மதுபிரியர்களின் அட்டகாசங்கள் ஆற்றூர் சந்திப்பில் அடிக்கடி நடைபெற்ற வண்ணம் உள்ளது.
திருவட்டாரை அடுத்த மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவருடைய மகன் ரதீஷ்குமார். இவர், ராணுவத்தில் பணியாறி வருகிறார். இவர் ஆற்றூரில் செயல்பட்டு வரும் மதுகடைக்குச் சென்று மது அருந்தி விட்டு, தள்ளாடியபடி ஆற்றூர் சந்திப்பில் சாலையில் சென்றவர்களிடம் வாய்த் தகராறு செய்துள்ளார். இதனைப் பார்த்து கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் ஆத்திரமடைந்து மதுபோதையில் இருந்த ராணுவ வீரர் ரதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்தபோது அவரை கீழே தள்ளிவிட்டு மிதித்ததோடு மட்டுமல்லாமல் மனிதாபமானமின்றி அப்பகுதியில் உள்ள இரும்பு தூணில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து திருவட்டார் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் தெரிந்தும் சுமார் 2 மணிநேரம் தாமதமாக வந்த திருவட்டார் காவல் துறையினர் தூணில் கட்டப்பட்டு ரத்தகாயங்களுடன் கிடந்த ராணுவ வீரரை மீட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து ராணுவ வீரர் ரதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் மதுபோதையில் சாலையில் தகராறு செய்த ராணுவ வீரரை இளைஞர்கள் சிலர் தாக்கியதைக் கண்ட பொதுமக்கள் சிலர் தடுத்ததால், அந்த ராணுவ வீரரை உயிரோடு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒருவர் குடிபோதையில் செய்த தவறுக்காக யாராக இருந்தாலும் அவர்களை கட்டிவைத்து தாக்குவது தவறு என்றும்; நாட்டின் எல்லையில் நம்மைப் பாதுகாக்கும் ஒரு ராணுவ வீரருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, திருத்த முயற்சிக்காதது தவறு எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இப்ப நான் தான் டிராபிக் போலீஸ்..! நடுரோட்டில் போதை ஆசாமி ரகளை