கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரை அடுத்த இரணியல் ஆர்.சி.தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜாண். இவரது மகன் சுஜித் (28). இவருக்கு திருமணமாகவில்லை. இவர், திங்கள் நகர் மார்க்கெட்டில் மீன் வியாபரம் செய்து வந்தார். சுஜித் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்டெபின் (19 ).
இருவரும் இரு சக்கர வாகனத்தில் சுஜித்தின் செல்போனை சரிசெய்ய திங்கள் நகர் சென்றனர். அப்போது சுஜித் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. அதில் திங்கள் நகர், பெரியாபள்ளி பகுதியைச் சேர்த்த நாராயணன் மகன் சுரேஷ் (எ) லாரி சுரேஷ் என்பவர் பேசியதாகவும், அவர் சுஜித்திடம் பேசுவதற்காக மேலமாங்குழி குளத்தின் அருகில் வா எனக்கூறி அழைத்ததாகத் தெரிகிறது. உடனே சுஜித், ஸ்டெபின் இருவரும் இருசக்கர வாகனத்தில், அப்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு சுரேஷ் மற்றும் அவரது நண்பர் நடுத்தேரி ஆற்றின்கரையைச் சேர்ந்த ராபி (எ) விமல் ஆகிய இருவரும் நின்றிருந்தனர். திடீரென இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுஜித்தின் மார்பு, வயிறு பகுதிகளில் குத்தியதில், சம்பவ இடத்திலேயே சுஜித் உயிரிழந்தார்.
பின்னர் சுஜித்துடன் சென்ற ஸ்டெபினை அடித்து விரட்டியுள்ளனர். கொலை குறித்து ஸ்டெபின் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இரணியல் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான காவலர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று சுஜித்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், மாங்குழி வாடிவிளைப் பகுதியைச் சேர்ந்த 37 வயது பெண்ணுடன் சுஜித், சுரேஷ் ஆகியோர் முறையற்ற உறவில் இருந்துள்ளனர். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் சுரேஷ், விமலும் சேர்ந்து சுஜித்தை கொலை செய்தது தெரியவந்தது. சுரேஷ் மீது ஏற்கனேவே கடந்த 2003ஆம் ஆண்டு பூசாஸ்தான் விளையைச் சேர்ந்த சுதர் என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கு, 2011இல் ஒரு கொலை முயற்சி வழக்கு ஆகியவை உள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். சுஜித்தை கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.