கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த சரக்கல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஷைபின். கல்லூரி படிப்பு முடிந்த பின் மும்பையில் பணியாற்றி வந்தார். அப்போது, முகநூலில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அலினா என்ற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், ஷைபினுக்கு வெளிநாட்டில் பணி கிடைத்ததும் அங்குச் சென்றார். தொடக்கத்தில் நண்பர்களாக பழகிய ஷைபின்-அலினா ஆகிய இருவரும் பின்னர் காதலிக்கத் தொடங்கினர்.
இந்தநிலையில், கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பின்பு, கடந்த சில மாதங்களாக ஷைபின் மது பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.
மதுவுக்கு அடிமையான அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றதால் தம்பதியர் இடையே பிரச்னை எழுந்தது. தொடர்ந்து இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துவந்தததால், கடந்த வாரம் அலினா தனது உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
தனது மனைவி பிரிந்து சென்றதால் ஷைபின் சோகத்தில் இருந்துவந்தார். மன வருத்தத்தில் இருந்துவந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இன்று(ஜன.5) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் ஷைபின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ஷைபின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.