கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் அருகே வசித்துவரும் ராமசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது 16 வயது மகள் வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்ற மகள் நீண்ட நேரமாக திரும்பாததால் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு, அக்கம்பக்கத்தில் தேடியும் தனது மகளை காணாததால் அச்சமடைந்து, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி காவல் துறை கடத்தப்பட்ட சிறுமியை தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் தேரூர் அருகே புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் (24) என்ற இளைஞர் சிறுமியைக் கடத்திச்சென்றுள்ளதாகக் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் புதுகிராமம் பகுதியில் வைத்து மகேஷ்குமாரை ஆரல்வாய்மொழி காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மகேஷ்குமாரிடமிருந்து கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஆரல்வாய்மொழி காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
சிறுமியை கடத்தியதாக மகேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மகேஷ்குமார் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு ஒரு சிறுமியை கடத்தியதாகப் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்பொழுது பிணையில் வெளிவந்து இந்தச் செயலை அரங்கேற்றியுள்ளார்.
இதையும் படியுங்கள்: சொத்துக்காக அண்ணன், அண்ணியை கொலைசெய்தவர் கைது