கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. இதனால் பெருஞ்சாணி அணையிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பொதுமக்களுக்கு குழித்துறை சப்பாத்து பாலத்தை கடந்துசெல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருதங்கோடு கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த ஷாஜிகுமார் (30) என்பவர் நேற்று (அக். 16) மாலை குழித்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
சப்பாத்து பாலத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது.
இது குறித்து குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமாரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை அவர் மீட்கப்படாததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: 'பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் பாகிஸ்தான்'