கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி ஒன்றாகும். அதற்கேற்ப இங்கு மக்கள் தொகையும் அதிகம்.
மேலும் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில், முக்கடல் சங்கமம் என சர்வதேச சுற்றுலாத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன.
சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள் இருந்தாலும் தினசரி காலை, மாலை சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் அதிகப்படியான தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துப்புரவு பணி, எலெக்ட்ரிக் மற்றும் குடிநீர் பணியாளர்கள் என மொத்தம் 60-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களை சம்பந்தப்பட்ட துறையினர் நேரடியாக ஒப்பந்த பணிக்கு அமர்த்தாமல் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி ஊழியர்களாக நியமித்துள்ளனர்.
இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தினசரி 400 ரூபாய் வீதம், மாதம் தோறும் 12,400 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 5ஆம் தேதி வழங்கப்பட்டு வந்த சம்பளம் தற்போது 15ஆம் தேதிக்கு மேல்தான் வழங்கப்பட்டு வருகிறது என்று ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த மாதம் 17ஆம் தேதி ஆகியும் இதுவரை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு முன்பு போல் 5ஆம் தேதியே ஊதியத்தை வழங்க வேண்டுமென வலியுறுத்தி 60க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் இன்று காலை கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் மாலை வரை நடத்திய போராட்டத்தைக் கைவிட்டனர்.