கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு பகுதியில் விளைகின்ற ரப்பர் உலகின் முதல் தர வரிசையில் இடம்பெற்றுள்ள ரப்பர் என்பதால், சர்வதேச சந்தையில் குமரி மாவட்ட ரப்பருக்கு வரவேற்பு அதிகம். அத்தகைய தொழிலில் அரசு ரப்பர் கழகம் தமிழக அரசு கீரிப்பாறை, குற்றியாறு, மயிலோடை உள்ளிட்ட குமரி மாவட்டம் முழுவதும் ஒன்பது கோட்டங்கள் இயக்கி வருகிறது.
இந்த ஒன்பது கோட்டங்களிலும் 3000க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ரப்பர் மரங்களில் இருந்து ரப்பர் பால் வெட்டி எடுத்து, அதனை பதப்படுத்தி ரப்பர் சீட்டுகளாக உருவாக்கும் பணிகளில் இந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடைய ஊதிய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் இவர்களுடைய ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. 68 முறை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் வனத்துறை மற்றும் தொழிலாளர் துறை உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒரு ஊழியருக்கு 40 ரூபாய் கூலி உயர்த்தி கொடுக்கப்படும் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கக்கோரி, அரசு ரப்பர் கழகத்திலும் அதிகாரியிடம் கேட்டபோது, அவர்கள் அரசுடன் நடத்திய ஊதிய உயர்வு தர முடியாது என அறிவித்துள்ளதால் தொழிற்சங்கங்களும் ரப்பர் தோட்டத்தொழிலாளர்களும் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.
கடந்த 7ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5ஆவது நாளாக இன்று கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் தொழில் கூடத்திற்கு முன்பு ஏராளமான ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள், பெண்கள் உட்பட தொழிலாளர்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதலமைச்சர் தங்கள் பிரச்னை பற்றி செவி சாய்ப்பதில்லை என பெண்கள் சரமாரியாக குற்றச்சாட்டினை முன் வைத்தனர். இந்த முதல் கட்டப்போராட்டம் நாளையோடு நிறைவு செய்து, இரண்டாவது கட்ட போராட்டத்தை வரும் திங்கட்கிழமை நாகர்கோவில் அரசு கழக அலுவலகத்தில் நடத்த தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மகள் சாவில் சந்தேகம்: காதலன் விஷம் கொடுத்திருக்கலாம் என தாய் போலீஸில் புகார்