கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் மாவட்ட சுற்றுலாத் துறையும் இணைந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்முறையாக காற்றாடி திருவிழா நடைபெற்று வருகிறது. இதை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்த குழுவினர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலாப் பயணிகள் பார்க்க விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடியிலான கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதைப் போன்று பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி, சொத்த விளை, சங்கு துறை பீச் போன்ற பகுதிகளில் தமிழ்நாடு சர்வதேச பட்டத்திருவிழா-2023 என்ற தலைப்பில் பிரமாண்டமான காற்றாடிகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பாதியில் நிற்கும் பாதயாத்திரை.. அண்ணாமலை நாளை டெல்லிக்கு திடீர் பயணம்.. காரணம் என்ன..?
இந்த காற்றாடி திருவிழாவில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்த காற்றாடி இயக்குபவர்கள் பல வண்ண காற்றாடிகளை பறக்கவிட்டு வருகின்றனர். முதலில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகத்துடனான காற்றாடி பறக்க விடப்பட்டது. அதன்பிறகு, நமது நாட்டின் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்திலான பலூன் பறக்க விடப்பட்டது.
தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. புலி உருவங்களுடன் கூடிய காற்றாடி, கார்ட்டூன் தொடர்களில் வரும் ஸ்பான்ஜ் பாப் உருவ காற்றாடி, சோட்டா பீம், டோலு - போலு , சுட்கி, பாலகணேசா, யானை, அசோக சக்கர வடிவிலான காற்றாடி எனப் பலவிதமான காற்றாடிகள் வானில் பறக்கவிடப்பட்டன. இதனை சுற்றுலாப் பயணிகளும் மாணவ-மாணவிகளும் கண்டு ரசித்தனர்.
இந்த காற்றாடி திருவிழாவில் வடமாநிலங்களில் இருந்து 3 குழுவினரும், மலேசியா நாட்டைச் சேர்ந்த 1 குழுவினர், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 குழுவினர் என மொத்தம் 6 குழுவினர் காற்றாடித் திருவிழாவில் கலந்துகொண்டு காற்றாடிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘மக்களின் தாகத்தை தீர்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - வானதி சீனிவாசன்!
மேலும் சங்குதுறை கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக டால்பின், ஆக்டோபஸ், சுறா மற்றும் பல்வேறு வடிவங்களில் பொம்மைகள் என 50க்கும் மேற்பட்ட காற்றாடிகள் வானில் பறக்கவிடப்பட்டன. இதனைப் பார்ப்பதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வந்து பார்த்து ரசித்தனர். பள்ளிக்கூடம் விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சிறுவர் சிறுமியர்களும் வண்ண வண்ண காற்றாடிகளைப் பார்த்து வியப்படைந்தனர்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெக்கி என்பவர், தனது குழுவினருடன் தங்கள் நாட்டின் பிரபலமான கார்ட்டூன் பொம்மை உருவ காற்றாடியை பறக்கவிட்டனர். அவர் கூறுகையில், ''கன்னியாகுமரி கடற்கரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்தியாவில் 2-வது முறையாக காற்றாடி திருவிழாவில் பங்கேற்று உள்ளோம்'' என்றார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மேகுல் படக் கூறுகையில், ''கன்னியாகுமரி மிகவும் அருமையான சுற்றுலா தலம். இந்த காற்றாடி திருவிழா, சுற்றுலா வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். நான் 2007-ம் ஆண்டு முதல் காற்றாடிகளை பறக்க விட்டு வருகிறேன். இந்தோனேசியாவில் உலக அளவிலான காற்றாடி கண்காட்சியில் நான் காற்றாடி பறக்க விட்டபோது, அதை நமது பிரதமரும், இந்தோனேசியா பிரதமரும் பார்வையிட்டனர்'' என்றார்.
கன்னியாகுமரியில் காற்று பலமாக வீசியதால், காற்றாடிகளை கட்டுப்படுத்துவதில் சிரமமான நிலை நிலவி வருவதாகவும்
உலக அளவிலான காற்றாடி திருவிழா, ஏறத்தாழ 50, 60 இடங்களில் நடக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். இதில் பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் நடப்பது தான் பெரிய திருவிழா ஆகும்.
கன்னியாகுமரியில் முதல் முறையாக காற்றாடி திருவிழா நடைபெறுகிறது எனக் கூறிய அவர்
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தால் இணைந்து நடத்தப்படும் இந்த திருவிழாவில் தனி நபா்கள் காற்றாடி பறக்க விடுவதற்கு அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஃபகத் ஃபாசில் வீடியோவை ஷேர் செய்தால் நடவடிக்கை? - ஃபகத்திற்கு கோரிக்கை வைத்த கிருஷ்ணசாமி!