கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தௌபீக், முகமது சமீம் ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் பத்து தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாலருவி அருகேயுள்ள தமிழக - கேரள நெடுஞ்சாலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நான்கு பேரை நுண்ணறிவுப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்தது எப்படி?
தென்காசி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன், தனியிடத்தில் வைத்து அந்நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில், குறிப்பிட்ட நபர்கள் டிஎன் 22 சிகே 1377 என்ற எண்ணுள்ள டாடா சுமோ வாகனத்தில் பயணம் மேற்கொண்டதை அறிந்த கொல்லம் ரூரல் போலீசார், தமிழ்நாடு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும் இணைந்து இன்று காலை முதல் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்
தென்மலை அருகேயுள்ள கழுதைஉருட்டி என்ற ஊரில், அந்நால்வரும் சாப்பிட்டுவிட்டு, பாலருவிக்கு திரும்பி குளிக்கச் செல்லும் வரை, தென்மலை ஆய்வாளர் தலைமையில் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. பிறகு அவர்கள் பாலருவியில் குளித்துவிட்டு திரும்பும்போது, தமிழக - கேரள நெடுஞ்சாலையில், அவர்கள் பயணம் மேற்கொண்ட வாகனத்தை விரட்டிச்சென்ற காவல்துறையினர், முன்னரே திட்டமிட்டவாறு நெடுஞ்சாலையின் குறுக்காக லாரியை நிறுத்தி, உயிரைத் துச்சமென மதித்து நுண்ணறிவுப் பிரிவு போலீசார் அவர்களை அதிரடியாகக் கைதுசெய்துள்ளனர்.
காவல்துறை விளக்கம்
இதுகுறித்து, தென்காசி காவல்துறை வட்டாரத்தை அணுகியபோது, ”தற்போது எதுவும் சொல்வதற்கில்லை. உணர்ச்சிபூர்வமான இந்த விஷயத்தில் காவல்துறை மிகவும் கவனத்துடன் அணுகவேண்டிய தேவையுள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலை நாங்கள் வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 21 குண்டுகள் முழங்க சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு அரசு மரியாதை!