உலகப்பரப்பளவில் நான்கில் மூன்று பங்கு பரந்து விரிந்து கிடக்கும் கடலை நம்பி, பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 7,516 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்திய கடற்கரையில் 1,076 கி.மீ தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. சென்னை முதல் குமரி மாவட்டம் நீரோடி வரை 608 மீனவக் கிராமங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்களும் வசிக்கின்றனர். இதில் சென்னை, தூத்துக்குடி போன்ற பெரிய வர்த்தக துறைமுகங்களும் 10-க்கும் மேற்பட்ட சிறிய மீன்பிடித் துறைமுகங்களும் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், 5ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகளும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் மீன்கள் உள்நாட்டு தேவைகளுக்குப் போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறன.
இதன் மூலம் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைக்கிறது. கடந்தாண்டுகளின் கணக்கின்படி தமிழ்நாட்டில் 6.69 லட்சம் டன் மீன்பிடிக்கப்பட்டு இதன் மூலம். 3ஆயிரத்து 914.39 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது
மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்:
தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது, இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்துவது மட்டுமின்றி அவர்களை கைது செய்து, சிறையில் அடைப்பது போன்ற அத்துமீறல்களும் தொடர் கதையாகி வருகிறது. அதேபோல் நமது நாட்டிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிக்கும்போது அவர்கள் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக வெளிநாட்டு சிறையில் வாடி வரும் நிலையும் உள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளை உடனடியாக களைய மத்திய அரசு மீனவர்களுக்கென அமைச்சகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதே போல் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உலகமயமாக்கல் கொள்கையின் தொடர்ச்சியாக பாரம்பரிய மீனவர்கள் உரிமைகள் தொடர்ந்து பறிக்கும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் செய்து வந்தது. 2004ஆம் ஆண்டு சுனாமி பேரழிவுக்குப் பின் மீனவர்களின் பாதுகாப்பு என்கிற பெயரில் குறிப்பாக கடற்கரை ஒழுங்குமுறை சட்டம் போன்ற சட்டங்களை இயற்றி மீனவ சமுதாய மக்களை அச்சுறுத்தி அவர்களின் கடற்கரையோர வாழும் உரிமையைப் பறித்ததுவிட்டு, பெரும் முதலாளிகளின் ரசாயன தொழிற்சாலைகள், உல்லாச விடுதிகள். ஆடம்பர சொகுசு பங்களாக்களை, கடற்கரையோரங்களில் அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான 'சாகர்மாலா' போன்ற திட்டத்தின் தொடர்ச்சியாக, கடற்கரை பகுதிகளில் வரவிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் புதிய துறைமுகங்கள் போன்றவை மீனவர்களின் வாழ்வுரிமையை அச்சுறுத்தி வருவதுடன், கடல் மற்றும் கடல்சார் நிலத்தின் மீதான மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகளும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
இவ்வாறு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண எந்தவொரு அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கையால் தங்கள் உயிரையும், உடைமைகளையும் பணயம் வைத்து கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் வாழ்வில் இனியாவது அரசுகள் அக்கறை செலுத்துமா? என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.....
குமரி மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள்:
1)மீன்பிடிக்கச்செல்லும் போது மாயமாகும் மீனவர்களை மீட்க குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்
2) மீன்பிடி தடைக்காலத்தை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
3)கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் உள்பட பல கோரிக்கைகளை அரசு ஏற்று மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பது இந்த பகுதி மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:மகா புயலால் கரை ஒதுங்கிய மீனவர்கள்: கண்ணீர் மல்க உதவிகோரும் மீனவர்கள்