கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி, குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர் பிரடி ஜான் போஸ்கோ என்பவருக்கு சொந்தமான செயின்ட் ஆண்டனி என்ற விசைப்படகில் சென்ற 11 மீனவர்கள், கொல்லம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த என்ரிக்கா லெக்சி என்ற எண்ணெய் கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டு கடற்படை வீரர்களான மிஸிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகிய இருவர் இந்திய மீன்பிடி படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அஜீஸ் பிங்கு மற்றும் ஜெலஸ்டின் ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டனர்.
உடனிருந்த 9 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே, இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரை கடலோர காவல் குழுமத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தியாவின் கடல் எல்லை 21 கடல் மைல் மட்டுமே, 22 கடல் மைல் தாண்டி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, இந்தியாவில் இந்த வழக்கை விசாரிக்க அதிகாரமில்லை என எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் இத்தாலி அரசு வாதம் முன்வைத்தது. எனினும், இந்தியாவின் கடல் எல்லை 200 கடல் மைல் வரை உள்ளது என்று கூறி இத்தாலியின் வழக்கை எர்ணாகுளம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்பின், இத்தாலி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த போதே இத்தாலி அரசு நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடி இந்த துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்க இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.
இந்தியாவில் சிறப்பு பொருளாதார கடல் பகுதி 200 கடல் மைல் வரை உள்ளது. ஆகவே இவ்வழக்கை விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என இந்திய தரப்பு வாதிட்டது. கடந்த 3ஆம் தேதி சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு வெளியானது.
இந்தியாவின் கடலுக்குள் நுழைந்து இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது குற்றம் என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், காயம்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை இந்திய அரசு இத்தாலி அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்குள் சர்வதேச நீதிமன்றத்தை நாடினால், இத்தாலி அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்படும் அல்லது வழக்கு முடிந்தது என கருதப்படும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், இந்திய கடல் எல்லைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இத்தாலி படையை சார்ந்தவர்கள் என்பதால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மாலுமிகளுக்கு தண்டனை வழங்க முடியாது என சர்வதேச நீதிமன்றம் கூறியது.
இதனிடையே, இத்தாலி வீரர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது அப்படகில் 14 வயது நிரம்பிய பிரஜின் என்ற சிறுவன் இருந்துள்ளார். இது தற்போது தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது இவரும் காயமடைந்தார். எனினும் இவர் குறித்து தகவல்களை படகின் உரிமையாளர் பிரடி ஜான் போஸ்கோ மறைத்துவிட்டார். குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் பிரச்னை உருவாகும் என்பதால் படகில் பிரஜின் என்பவர் இருந்ததற்கான எந்த சாட்சியத்தையும் அவர் கொடுக்கவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரஜின், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
இறந்தவர்களுக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுவரும் சூழலில், பிரஜினை இழந்து தவிக்கும் தங்களுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என அவரின் குடும்பத்தார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச குழந்தைகள் உரிமை சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகிவற்றின் அடிப்படையில் 100 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு மனு அளித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது, வேறொரு கப்பலின் மூலம் பிரஜினை, கப்பல் உரிமையாளர் தப்பிக்கவைத்துள்ளார். அத்துப்பாக்கிச் சூட்டை கண் எதிரே பார்த்த காரணத்தால் பல நாள்களாக பிரஜின் தூங்காமல் அவதிக்குள்ளாகிவந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். குடும்பத்தை எடுத்து நடத்த வேண்டிய நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதால், அவரது குடும்பத்தார் நிவாரணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வழக்கில் மீனவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்க தொடர்ந்து போராடிவரும் தெற்காசிய மீனவர் தோழமை நிறுவனர் அருட்தந்தை சர்ச்சில் இதுகுறித்து கூறுகையில், "இந்திய, மீனவர்களின் உயிர் மதிப்புக்குரியது. உதாரணமாக, 2003ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு விசைப்படகு மீது அமெரிக்கா நாட்டு நீர்மூழ்கி கப்பல் மோதியதில் ஜப்பானியர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது ஜப்பான் அரசானது அமெரிக்காவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து கொல்லப்பட்ட மீனவர்களுக்கு தலா 90 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுக்கொடுத்தது.
அதுபோன்று இந்திய அரசும் 2012ஆம் ஆண்டு இத்தாலி படைவீரர்களால் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு தலா 100 கோடி ரூபாயும் காயம்பட்ட ஒன்பது மீனவர்களுக்கு தலா 10 கோடி ரூபாயும் இழப்பீடு பெற்றுத்தரவேண்டும்.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இத்தாலி அரசோடு இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும்போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரதிநிதிகளையும் உட்படுத்த வேண்டும். இத்தீர்ப்பு மறுபக்கம் இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளது. ஏனென்றால், இத்தாலிய படை வீரர்களுக்கு எதிராக குற்ற வழக்கு நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கொலை குற்றவாளிகள் தண்டனை இல்லாமல் தப்புவதற்கு இத்தீர்ப்பு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்நிலை நீடித்தால் இந்திய மீனவர்களுக்கு எதிராகவும் இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கு எதிராகவும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இந்திய தண்டனை சட்டப்படி தண்டிக்க இயலாமல் போய்விடும்.
எனவே இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கவும் இந்தியர்களை பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடி இந்தியாவின் சிறப்பு பொருளாதார கடல் பகுதியான 200 மைல் கடல் எல்லைக்குள் நிகழ்கின்ற எந்தச் செயலுக்கும் இந்திய தண்டனை சட்டப்படி தண்டிக்க இந்தியாவின் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பில் அரசு சுமாராக கூட செயல்படவில்லை - கே.எஸ் அழகிரி