கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையைச் சேர்ந்தவர் முத்துராஜ்(49). தனியார் பில்டிங் காண்ட்ரக்டர். இவரது மகன் கன்னியாகுமரி பகுதியிலுள்ள ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார். இதனால் தினமும் மாலையில் கொட்டாரத்திலுள்ள செல்வக்குமார் என்பவர் நடத்தி வரும் டியூனுக்கு செல்வார். டியூஷன் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு டியூஷன் குறித்த தகவல்களை அனுப்ப செல்வக்குமார் ஒரு வாட்ஸ்அப் குழுவை வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இந்த வாட்ஸ்அப் குழுவுக்கு இளம் பெண்களின் ஆபாச வீடியோ வந்துள்ளது. இதனைக்கண்டு மாணவ, மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து குரூப் அட்மினும் டியூசன் மாஸ்டருமான செல்வக்குமாரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செல்வக்குமார் இதுகுறித்து காவல் துறையில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறை அந்த ஆபாச படம் அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரது செல்ஃபோனிலிருந்து வந்ததை கண்டறிந்து அவரை தகவல் தொழில்நுட்பத்தை தவறுதலாக பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக ஆபாச படம் அனுப்பியதற்காக கைது செய்தனர்.