தமிழ்நட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக வாக்காளர் பட்டியலை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, கன்னியகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 537 பேர், பெயர் சேர்க்க விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். மேலும் நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய என்று மொத்தம் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.
ஜனாவரி 1ஆம் தேதி தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி ஆனவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும், உயிரிழந்த, குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பெயர் மற்றும் முகவரி திருத்தம் மேற்கொள்ளவும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யவும் மாவட்டத்திலுள்ள 1,694 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றும் நாளையும் (டிசம்பர்-13) காலை 9:30 முதல் மாலை 5.30 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் ஏராளமான வாக்காளர்கள் இன்று விண்ணப்பங்களை பெற்று சென்றனர். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைத்தனர். இதையடுத்து, ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.