கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி காங்கிரஸ் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமைவகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார். பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி ஏற்று காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்கவிழாவை நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் சேர்ந்து கொண்டாடினர்.
முன்னதாக ஊர்வலமாக குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் உள்பட காங்கிரஸ் கட்சியினர், வடசேரி எஸ்.எம்.ஆர்.வி., சந்திப்பிலிருந்து காந்தி சிலை அமைந்துள்ள பகுதிவரை கையில் காங்கிரஸ் பேரியக்க கொடியுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் வசந்த் கூறியதாவது, “நாட்டின் சுதந்திர போராட்டம், வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டத்தை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் தற்போதைய பாஜக அரசு அதற்கு எதிராக செயலாற்றிவருகிறது.
பாஜகவின் ஆட்சியில் தான் பெருநிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் விரோத நடவடிக்கைகளை பாஜக உடனடியாகக் கைவிட வேண்டும். விரைவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்” என்றார்.