கன்னியாகுமரி: சமீப காலங்களாக அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது என்பது ஏதோ விருந்தாளிகள் வந்து செல்வதை போன்று சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பெண் அதிகாரி ரேவதி என்பவர் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர் பணிபுரிந்த இடத்தில் மட்டுமல்லாது, அவரது ஊரிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் மகளிர் திட்ட அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் நாகர்கோவிலைச் சேர்ந்த ரேவதி. அரசு சார்பில் மகளிர் திட்டங்கள் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஒவ்வொரு திட்டங்களுக்கும், பயனாளிகளிடம் கையை நீட்டுவதே ரேவதியின் வழக்கமாக இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவர், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதில் பல மோசடிகளை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு புகார்கள் இவர் மீது அடுக்கடுக்காக எழுந்ததை அடுத்து, கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது இரண்டு லட்சம் ரூபாய் பிடிபட்டது.
இதற்கு ரேவதி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்த பதிலில், தனது கை செலவிற்காக இந்த பணத்தை வைத்திருந்ததாகக் கூறி, அதிகாரிகளையே அதிர வைத்துள்ளார். கை செலவுக்கு மட்டும் 2 லட்சம் என்றால் மற்ற விவகாரங்கள் எந்த அளவில் இருக்கும் என்ற எண்ணம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எழவே, புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்த முடிவெடுத்தனர்.
இந்த நிலையில், ரேவதியின் வீடு நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில், கீழ ரத வீதியில் உள்ள சந்து ஒன்றில் இருப்பதாக தெரிய வந்தது. இதனை அடுத்து, புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் சோதனையை துவக்கினர்.
இந்த சோதனையின் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போலீசார் அக்கம் பக்கத்து பகுதிகளில் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்களும் வெளியாகி உள்ளன.
அதன்படி, ரேவதி வடிவீஸ்வரம் பகுதியில் மட்டும் 10 வீடுகள் வாங்கி இருப்பதாகவும், அதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், சுமார் ஒன்றேகால் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வீட்டை வாங்கியதாகவும் போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பல்வேறு சமூக நலத்திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறது. அதிலும் பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஒவ்வொரு திட்டத்திற்கும் கையூட்டு பெற்றுக் கொண்டு, பயனாளிகளுக்கு வழங்கும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களிடம் இருந்து சுரண்டி பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வதோடு, அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: வேளச்சேரியில் தொடரும் மீட்புப் பணி.. மேலும் ஒருவர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டரா?