தமிழ்நாட்டில் வைகுண்டசாமி கோயில்களில் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் முதன்மையான பதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி ஆகும். இங்கு ஆண்டுதோறும் தை, ஆவணி, வைகாசி ஆகிய மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தகுந்த இடைவெளியை கடைபிடித்து வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.
முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு கொடிபட்டம் தயாரிக்கப்பட்டது. பின்பு கொடிபட்டம் பதியை சுற்றி ஐந்து முறை வலம் வந்து கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் அய்யா சிவ சிவ சிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் அய்யாவை வழிபட்டனர். ஊரடங்கு காரணமாக பதியினுள் சுமார் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட அய்யாவழி பக்தர்கள் பதியை சுற்றி தகுந்த இடைவெளியை கடைபிடித்து நின்று கொடியேற்றத்தை கண்டு வைகுண்ட சாமியை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கரோனா நோய் உலகத்தில் இருந்தும் மக்களிடம் இருந்து நீங்க சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. அப்போது தென்தாமரைகுளம் காவல்நிலைய காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
இது குறித்து குரு பாலஜனாதிபதி கூறியதாவது; வழக்கமாக திருவிழா நாட்களில் காலை, மாலை பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, தினசரி வாகன பவனிகள் எட்டாம் நாள் கலிவேட்டை மற்றும் 11ஆம் நாள் தேரோட்டம் ஆகியன நடைபெறும். ஆனால் தற்போது ஊரடங்கு இருப்பதால் அரசு விதிக்கும் தளர்வுகளுக்கு ஏற்றார்போல் பணிவிடைகள் நடைபெறும் என்றார்.
இதையும் படிங்க: கூடங்குளம் 2ஆவது அணு உலை பழுது - 465 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு