கரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பஸ், ரயில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் குடிபெயர்ந்த தொழிலாளர்களைசொந்த ஊர்களுக்கு அனுப்ப குஜராத், பிகார் போன்ற வட மாநிலங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்தச் சூழலில் இன்று (ஜூன் 1) முதல் நான்கு வழித்தடங்களில் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (ஜூன் 1) காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு 19 பெட்டிகளுடன் இன்டர்சிட்டி ரயில் புறப்பட்டது. இன்று முதல் நாள் என்பதால் ரயில் பெட்டிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
நாகர்கோவில் ரயில் நிலையம் திருச்சியிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகேர்கோவிலை வந்தடைந்தது. முன்னதாக ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.ரயிலில் வந்த பயணிகளை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மருத்துவ குழுவினர் சோதனை செய்தனர். மேலும் பயணிகளிடம் பெயர், வயது , முகவரி போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதன் பின்னரே இவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.இன்டர்சிட்டி ரயில் வழக்கத்தைவிட அரை மணி நேரம் முன்பாகவே வந்துவிட்டது. இதனால் மருத்துவ பரிசோதனைக்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. எனவே பயணிகள் நீண்ட நேரம் ரயில் நிலையத்தில் காத்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதுபோல ஊரடங்கு உத்தரவு காரணமாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள மூடப்பட்டிருந்த முன்பதிவு கவுன்ட்டர் இன்று முதல் திறக்கப்பட்டது. எனினும் அதிகளவு யாரும் டிக்கெட் முன்பதிவு செய்ய வரவில்லை.