கன்னியாகுமரி: திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 3 மாதங்களில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேசி தீர்க்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து 13 மாதங்களாக அல்வா கொடுத்து ஏமாற்றி வருவதாகக்கூறி, தமிழ்நாடு அரசைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அரசு போக்குவரத்துக்கழகப்பணிமனை முன் பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழகத்தொழிலாளர்களுக்கு அல்வா கொடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சிக்கு வந்து 13 மாதங்களாகியும் போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் விடிவு எட்டாத நிலையில் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக திருவட்டார் போக்குவரத்து பணிமனை முன்பு பாரதீய மஸ்தூர் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும்; ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க கேட்டும், மகளிர் இலவசப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வசூல்படி வழங்க கேட்டும், ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் எனக்கூறி விட்டு 13 மாதங்களாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அல்வா கொடுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தில் பாரதீய மஸ்தூர் சங்கத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: இலங்கையிலிருந்து அகதியாக வந்த மூதாட்டி உயிரிழப்பு