கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதனால் போக்குவரத்தும் முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது போக்குவரத்து சேவைகள் படிப்படியாக செயல்பட்டுவருகின்றன. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் 40 விழுக்காடு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
தற்போது தனியார் பேருந்து சேவைகளும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, ராணி தோட்டம், குளச்சல் உள்ளிட்ட 12 போக்குவரத்து பணி மனைகளில் உள்ள 1200க்கும் மேற்பட்ட பேருந்துகளில் தற்போது 40 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
கரோனா ஊரடங்கிற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.80 லட்சமாக இருந்த போக்குவரத்து வருமானம், தற்போது ரூ.30 லட்சத்திற்கு குறைந்துள்ளது. அதேபோல ஊரடங்கிற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 52 பேருந்துகள் தினசரி பேருந்துகள் கேரள மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் கேரள மாநிலத்தில் இன்னும் வெளி மாநில பேருந்துகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. அதன் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து செல்லும் பேருந்துகள் கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுவிடுகின்றன. இதன் விளைவு பலதரப்பட்டவர்களை பாதிப்படைய வைத்துள்ளது.
குமரி மாவட்ட எல்லைப் பகுதிகளான மார்த்தாண்டம், குலசேகரம், கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிகின்றனர். அதுமட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல மருந்துமனைகளில் குமரியைச் சேர்ந்தவர்கள் நோயாளிகளாக உள்ளனர்.
அவ்வாறு இருக்கையில் கேரளா மாநிலம் குமரி பேருந்துகளுக்கு அனுமதி அளிக்காதது அனைவரையும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக குமரி மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை ஊழியர் இளங்கோ கூறுகையில், "குமரி மாவட்ட நிர்வாகம் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கேரளாவிற்கு பேருந்துகளை இயக்க தயார் நிலையில்தான் உள்ளது.
ஆனால் கேரள மாநில அரசு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்திவருகிறது. அதனால் கேரளாவை வியாபார தளமாக கொண்ட வியாபாரிகள், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மருத்துவ நோயாளிகள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுகின்றனர். எனவே கேரள மாநில அரசு கன்னியாகுமரி மாவட்ட பேருந்துகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அப்படி அனுமதி அளிக்கப்பட்டால் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவித்தார்.
நாடு முழுவதும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், கேரள அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை அம்மாநிலத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: குமரி ஆட்சியர் பெயரில் போலி இ-மெயில்: அரசு தகவல்கள் திருட்டு