கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில், பள்ளியாடி அருகே தெங்கன்குழி பகுதியில், தாழ்வான இடத்தில் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது.
இந்தப் பகுதியில் தண்டவாளத்தின் இருபக்கமும் உயரமான மண் பகுதி என்பதால் இங்கு தொடர் மழை பெய்யும் காலங்களில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளம் மண்ணால் மூடப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது உண்டு.
இந்நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் மழையால் நேற்று (ஜூன் 7) நள்ளிரவு மண் சரிந்து தண்டவாளத்தில் விழுந்தது.
இதனால் இன்று (ஜூன் 8) காலை திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் சரக்கு ரயிலும், ரயில்வே பணிக்காகத் தொழிலாளர்கள் செல்லும் ரயிலும் வழியிலேயே நிறுத்தப்பட்டன. தண்டவாளத்தை மூடியுள்ள மண்ணை அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பயணிகளுக்கான ரயில் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.