கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே கடுமையான சூறைக் காற்று வீசி வருகிறது. இதில் ஆரல்வாய்மொழி அருகே ரயில்கள் செல்லும் பாதை அருகே வைக்கப்பட்டு இருந்த விளம்பரப் பலகை, சூறைக் காற்றினால் மின் கம்பியில் விழுந்தது. இதில் மின் கம்பி அறுந்து விழுந்ததோடு தூண்களும் சேதம் அடைந்தன.
இதனால், நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டு இருந்த ரயில், அதே இடத்தில் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே துறையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், மின் கம்பியின் மீது விழுந்த விளம்பரப் பலகையை சுமார் இரண்டு மணி நேரம் போராடி அகற்றினர்.
மேலும், அறுந்து விழுந்த மின் கம்பியை மாற்றி, புதிய மின் கம்பிகளை இணைத்தார்கள். இதனால் நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் விரைவு ரயில், கோவை செல்லும் ரயில் உட்பட நான்கு ரயில்கள் ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.
மின் கம்பி அறுந்து விழுந்ததால் சுமார் இரண்டு மணி நேரம் ரயில் சேவைப் பாதிக்கப்பட்டது. இதனால், ரயிலில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
ரயில் பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்ததை உடனடியாக கவனித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு