தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள தேவி முத்தாரம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 251 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.
இங்கு தமிழர்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் சுற்றுலாப் பயணிகள் அறியும் வகையில், மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கன்னியாகுமரியில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து, அகஸ்தீஸ்வரத்தில் ஊர் பொதுமக்களுடன் பொங்கலிடும் நிகழ்ச்சியில் பங்குபெற வைப்பது வழக்கம்.
அதே போல், இந்த ஆண்டும் ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், ஜப்பான், ஸ்காட்லாந்து, வடமாநிலத்தைச் சேர்ந்த 55க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன் தனிவாகனத்தில் அழைத்து வந்து, பொங்கலிடும் நிகழ்ச்சியில் பங்குபெற வைத்தார். அவர்களுக்கு மேள தாளம் முழங்க மலர் மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அகஸ்தீஸ்வரம் ஊர் மக்கள், புதுமணத் தம்பதிகள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் 251 பானைகளில் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் சேர்ந்து சமத்துவப் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
பானைகளில் பொங்கல் பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சியுடன் சத்தமிட்டு குலவை ஒலி எழுப்பி மகிழ்ந்தனர்.
மேலும், கிராமிய நடன நிகழ்ச்சியும், கிராமிய தற்காப்பு கலைகளும், கிராமிய பாடல், இசை நிகழ்ச்சியும் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதையும் படிங்க: சேலத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!