அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு வடக்கு வாசலில் ஆறு வருடங்கள் தவம் இருந்தார். தவத்தை நிறைவேற்றிவிட்டு தனது சீடர்கள் மற்றும் பக்தர்களோடு முட்டப்பதிக்கு ஊர்வலமாக சென்று அங்குள்ள பால்கடலில் புனித நீராடி இறைவனாக அவதாரம் எடுத்தார்.
பின்னர் அன்று மாலை தன்னுடைய பக்தர்களோடு மீண்டும் சாமிதோப்பு தலைமைப்பதிக்கு வந்ததாக அகிலத்திரட்டு (வழிபாட்டு முறை நூல்) கூறுகிறது. இந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் செல்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருட முத்துக்குடை ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து தலைமைப்பதிக்கு முன்பு இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.