கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் ஏக்நாத் ரானடே திடலில் இந்து முன்னணி சார்பாக குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய இந்து விரோத முறியடிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம கோபாலன் சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாபநாசம் சொரிமுத்தார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்துள்ள தமிழ்நாடு வனத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தோடு கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து இடையூறு செய்தால் வன்முறையில் இறங்கவும் தயங்க மாட்டோம் என்றார். அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை கெடுத்தது யார் என்பது பற்றி தமிழ்நாடு அரசு விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க தமிழ்நாடு அரசு தவறியதால், தமிழ்நாட்டில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசே நிதி உதவி செய்து வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ராம கோபாலன் குற்றம் சாட்டினார்.