கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் புலித்தோல் விற்பனை செய்த நல்லூர் பகுதியைச்சேர்ந்த ரமேஷ், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ராஜா, இமானுவேல் மற்றும் ஜெயகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள், காட்டு விலங்குகளின் இறைச்சி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள், கடல் உயிரின பொருள்கள் எனப் பல்வேறு கடத்தல் சம்பவங்களும் குற்றச்செயல்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இவை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வனத்துறை மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதுடன் இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவிலில் புலித்தோல் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தியதில் நாகர்கோவில் அருகே நல்லூர் பகுதியைச்சேர்ந்த ரமேஷ் என்பவர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ராஜா, இமானுவேல் மற்றும் ஜெயகுமார் ஆகியோருடன் சேர்ந்து புலித்தோல் விற்பனை செய்வதாக தெரியவந்தது.
இதனையடுத்து புலித்தோல் வாங்கும் நபர்கள் போல் வனத்துறையினர் நடித்து சம்பந்தப்பட்ட ரமேஷ் என்பவரிடம் அதிகாரிகள் போனில் தொடர்புகொண்டு 15 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி, அவர்களை நாகர்கோவில் வரவழைத்துள்ளனர். அப்படி வந்தவர்களை வனத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்களிடம் இருந்த 2.5 கிலோ எடை கொண்ட புலியின் தோலைப் பறிமுதல் செய்து இதில் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:'ஜல் ஜீவன்' திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்படாமல் அமைக்கப்பட்ட வெற்றுக்குழாய்கள்!