கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலைய இணைப்பு பாதைக்காக அமைக்கப்பட்ட இரும்பு பிளேட்டுகள் மற்றும் தண்டவாள இரும்பு கம்பிகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சாபு ஜேக்கப், உதவி ஆய்வாளர் சிராஜுதீன் தலைமையிலான காவல்துறையினர் திருடர்களை பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, குளித்துறை அடுத்த ஞாறம்விளை பகுதியில் கண்காணிப்பில் இருந்த போது அவ்வழியாக வந்த ஒரு சுமோ காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அப்போது, காரை நிறுத்திவிட்டு 5 பேர் தப்பியோடியதில் 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பியோடினர். விசாரணையில் பிடிபட்டவர்கள் குழித்துறை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30), ஜான் ரோஸ் (62), பால்ராஜ் (65) என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய மாரிமுத்து, சனல் குமார் ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றவாளிகள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அறந்தாங்கி சிறுமி கொலை வழக்கு - தப்பியோடிய கைதி ராஜா மீண்டும் கைது