கன்னியாகுமரி: முக்கடல் சங்கமத்தில் இன்று (ஜூலை 28) ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனையொட்டி, 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மயிலாடி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் ஒருவர் குடிபோதையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்துவிட்டு கடலில் இருந்த பாறை ஒன்றின்மீது ஆபத்தான முறையில் ஏறினார்.
அவருக்கு அங்கிருந்த கடலோர பாதுகாப்பு படை போலீசார் எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல், தொடர்ந்து பாறை மீது ஏறி அலைகளை பார்த்து கொண்டும், போலீசாரின் விசில் சத்தத்திற்கு எதிர் விசில் அடித்தும் அபாயத்தை உணராமல் நின்று கொண்டிருந்தார். இதனிடையே போலீசார் தொடர்ந்து அவரிடம் பேசிய நிலையில் கீழே கடலில் இறங்கியவர் மீண்டும் பாறை மீது ஏற முயற்சித்ததால், கடலில் நீந்தி சென்று துரைசிங் என்ற காவலர் அவரை பிடித்து கொண்டு வந்தார்.
அதன் பின் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் சந்தோஷை எச்சரித்து அனுப்பினர். ஆபத்தான பாறையில் திடீரென அலைகள் வேகமாக வீசினால் பாறை மீது விழுந்து உயிரிழக்க நேரிடும். ஆபத்தை உணராமல் இளைஞரின் இச்செயல் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ஆடி அமாவாசை: குமரி முக்கடல் சங்கமத்தில் சங்கமித்த மக்கள் கூட்டம்!