கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் வெளியிட்டுள்ள காணொலி காட்சியில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எனினும் கரையோர மீன் பிடித்தலுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. ஆழ்கடலில் நீண்ட நாட்கள் தங்கி மீன் பிடிப்பதற்கும் தமிழ்நாடு அரசு அனுமதி தரவேண்டும்.
அதேபோன்று ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வதற்குத் தேவையான பனிக்கட்டி தயாரித்தல் நிறுவனங்கள் செயல்பட அனுமதி தரவேண்டும். மீனவர்களுக்கு எரிவாயு எளிதாக கிடைக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கடலில் மீன்பிடித்துவிட்டு திரும்பும்போது அரசே மீனை கொள்முதல் செய்து அதனை சந்தைப்படுத்துவதற்கு மீனவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இதன் மூலம் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரமான மீன் உணவு கிடைப்பதுடன், மீனவ மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் கடலில் 60 நாட்கள் மீன்பிடிக்க தடை விதித்துவருகிறது. இந்த ஆண்டு கரோனா காரணமாக மீனவர்கள் நீண்ட நாட்களாக கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. எனவே தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விதிக்கும் 60 நாள்கள் தடையை இந்த முறை ரத்து செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 14ஆம் தேதி முதல் அனைத்து காய்கறி கடைகளும் மூடப்படும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு