கன்னியாகுமரி: நாகர்கோவில் நடந்த மருத்துவத்துறை ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு மருத்துவர் ஒருவர் கூட்டத்தில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனம் செலுத்தியதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த், அவரை பணியிடமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க அரசு மருத்துவர்கள் நேற்று (ஜூலை29) ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகினர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவத்துறை சார்பாக அண்மையில் அனைத்து அரசு மருத்துவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் குட்டக்குழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹெலன் மேஜர் என்பவர் ஆய்வு கூட்டத்தில் செல்போனில் கவனம் செலுத்தியதை கவனித்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த், சம்பந்தபட்ட அரசு மருத்துவரை குமரி மாவட்டத்தில் இருந்து பணியிடமாற்றம் செய்ய பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆங்காங்கே ஒரு சில ஆர்பாட்டங்களை நடத்தினார்கள்.
நேற்று கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 'அணி திரளுவோம் - அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்' என்ற பதாதைகளுடன் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடமாற்றம் செய்ததற்கு எங்கள் போராட்டம் மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் மீண்டும் தீவிரப்படுத்தப்படும் என அரசு மருத்துவர் சங்கம் தமிழ்நாடு அரசிற்கு எச்சரிக்கை விடுவித்துள்ளது. அரசு மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தால் நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவித்தனர்.
இதையும் படிங்க: நியாய விலைக்கடைகளில் கீழே சிந்திய பொருட்களை விநியோகம் செய்யக்கூடாது!