சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
அதன்படி, காலையில் சூரிய எழுதலை பார்த்துவிட்டு முக்கடல் சங்கமத்தில் நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை தரிசனம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் அதன் பிறகு கன்னியாகுமரி காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம், உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்றுவருகின்றனர்.
இதேபோல குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை வெயில் தணிந்து குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்துவருவதால் திற்பரப்பு அருவியில் குளித்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக மகிழ்ந்து வருகின்றனர்.
அதன்பிறகு மாத்தூர் தொட்டிப் பாலம் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணை ஆகிய பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று சுற்றிப் பார்த்து வருகின்றனர். மேலும் பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.