ஒரு காலத்தில் விவசாயிகளின் நண்பனாக திகழ்ந்த சிட்டுக் குருவிகள், வீடுகளின் மேற் கூரைகளிலும், ஓலைக்குடிசைகளிலும் குடும்பத்தில் ஒரு அங்கம் போல வாழ்ந்து வந்த சிட்டுக்குருவிகள் இன்று வேகமாக மறைந்து வருகின்றன. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான கதிர்வீச்சுகளால் முற்றிலும் அழியும் நிலையை சந்தித்துள்ளது. வயல்களில் பூச்சிமருந்து அதிகம் தெளிக்கப்படுவதால் பூச்சிப்புழுக்களை உணவாக உண்ணும் சிட்டுக்குருவிகள் போதிய உணவின்றி அழிந்திருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தெள்ளாந்தி பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிட்டுக்குருவிகளின் பாரம்பரியம், அவற்றை பாதுகாப்பதன் அவசியம், சிட்டுக்குருவிகளால் மனித குலத்துக்கு ஏற்படும் நன்மைகள், அவை அழிந்து வருவதற்கான காரணங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.