மதுரை: கன்னியாகுமரி பூத்துறை பகுதியைச் சேர்ந்த ஆண்டர்சன் சேவியர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அம்மனுவில், ”கன்னியாகுமரி நித்திரவிளை காவல் நிலையத்திற்குள்பட்ட பூத்துறை கிராமத்தில் தனியார் மீன் பதப்படுத்தும் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்தி செய்யும் மையம் செயல்பட்டுவருகின்றது.
இந்த மீன் பதப்படுத்தும் ஆலைக்கு மாவட்ட நிர்வாகமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் எந்த அனுமதியும் வழங்கவில்லை. இந்த ஆலை சட்டவிரோதமாகச் செயல்பட்டுவருகிறது.
பல்வேறு உடல் உபாதைகள்
இந்த ஆலையில் மீன்களைப் பதப்படுத்தும்போதும், எண்ணெய் தயாரிக்கும்போதும் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருள்கள் கடலில் கொட்டப்படுகின்றன. அங்கிருந்து வெளியேற்றப்படும் மோசமான துர்நாற்றத்தால் இந்தப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உடல் உபாதைகளுக்கும் உள்ளாகிவருகின்றனர்.
மீன் ஆலையை மூடக் கோரிக்கை
2009ஆம் ஆண்டுமுதல் இந்த ஆலையை மூட வேண்டும் எனப் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு, வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்கள் ஏற்படுகின்றன.
2019ஆம் ஆண்டு பெரிய போராட்டம் நடத்திய பின்பு மாவட்ட நிர்வாகம் இந்த ஆலையை மூடி சீல்வைக்க முயற்சித்தது. ஆனால் ஆலை நிர்வாகம் அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடாமல் விட்டுவிட்டனர். எனவே பொதுமக்களைப் பெரிதும் பாதித்து சட்டவிரோதமாகச் செயல்படக்கூடிய இந்த மீன் ஆலையை மூட உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மீன் பதப்படுத்தும் ஆலைக்குச் சீல்
இந்த வழக்கு இன்று (ஜூலை 14) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் முறையான அனுமதி பெறாமல் ஆலை செயல்படுவதாகவும், அதிக யூரியா, அமோனியா, மெர்குரி வாயுவை வெளியேற்றுவதால் மக்கள் புற்றுநோய் போன்ற நோயால் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மீன் பதப்படுத்தும் ஆலையை மூடி சீல்வைக்க உத்தரவு பிறப்பித்தனர். மாவட்ட நிர்வாகம், மின் வாரியம் உடனடியாக குடிநீர், மின்சார விநியோகத்தைத் துண்டிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அரசுக்கு அனைத்துவிதத்திலும் அறிக்கை உதவியாக இருக்கும் - ஏ.கே. ராஜன்